தென் தமிழீழத்தின் நுழைவாயிலில் மீண்டும் புத்தர் சிலை!
மட்டக்களப்பு மாவட்ட நகர நுழைவாயிலில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சி இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின் மதவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஏதுவான நிலை தொடர்பில் ஆராயுமாறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாசார திணைக்களங்களுக்கு துறைசார் அமைச்சினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் நிலையில், மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பட்டியே சுமங்கலதேரரின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பில் ஒருவார காலத்துக்குள் அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத விவகார, புத்தசாசன அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
இன்னமும் சில நாள்களில் மூன்று திணைக்களங்களையும் சேர்ந்த தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment