வெட்கித் தலைகுனியும் வெளிநாட்டு அரசுகள்!
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் மற்றும் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி வருகிறது என்ற உண்மை இப்போது மெல்ல மெல்ல அனைத்துலக சமுதாயத்துக்கு தெரியவரத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை அரசாங்கத்தின் பின்னால், நின்று செயற்பட்ட அனைத்துலக சமூகம், இன்று தனது முன்னைய நிலைக்காக வெட்கப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் போக்கு அத்தகையதொரு நிலையையே உருவாக்கி விட்டுள்ளது.
போருக்கு முன்னர் இருந்த இலங்கை அரசாங்கமும், இப்போதுள்ள அரசாங்கமும் ஒன்றேயாயினும், இரண்டுமே வேறுபட்ட முகங்களைக் கொண்டவை என்பது வெளிச்சமாகியுள்ளது. போரின் போதும், போருக்கு முன்னரும் வெளியிட்ட கருத்துகளுக்கும், அளித்த வாக்குறுதிகளுக்கும், போருக்குப் பிந்திய அதன் கருத்துகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசங்களை அவதானிக்க முடிகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரானது என்று இலங்கை அரசாங்கம் நடத்திய போர், விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே இருக்கும் என்று உலகநாடுகள் முழுமையாக நம்பிக் கொண்டன. அதனால், போருக்குப் பிந்திய சூழலில், அமைதி உருவாகும் என்றும், தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, நிம்மதியாக, சமத்துவமாக வாழும் சூழல் ஏற்படும் என்றும் அந்த நாடுகள் நம்பின. அவ்வாறு நம்பிய நாடுகளில் இந்தியா முக்கியமானது. அமெரிக்கா போன்ற நாடுகளும் அதில் அடக்கம். ஆனால் இப்போது, இலங்கை அரசு போரில் வென்று விட்டாலும் அமைதியை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்து விட்டது என்றே பெரும்பாலான நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன.சர்வதேச அளவில் ஊடகங்களில் வெளியாகும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளில், போர் வெல்லப்பட்டாலும், அமைதி தோற்றுவிட்டது என்று குறிப்பிடப்படுவது வழக்கமாக மாறிவருகிறது. இதற்கான அடிப்படைக் காரணம், இந்த நான்கு ஆண்டுகளிலும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாது போனது தான்.
ஆரம்பத்தில், சமமான உரிமைகள் கோரி நடத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், தனிநாடு ஒன்றுக்கான ஆயுதப்போராட்டமாக வீரியத்துடன் வெடித்தது தமிழர்களின் பிரச்சினை. ஆனால், அந்த ஆயுதப் போராட்டம் ஒரு நிழல் அரசை உருவாக்கி நடத்தும் அளவுக்கு முன்னேறிய போதிலும், மீண்டும் சறுக்குமரத்தில் இருந்து தவறியது போல, கீழே வந்து நிற்கிறது. தனிநாடு என்ற கோரிக்கை உள்ளக சமஸ்டியாக இறங்கி, ஒரு கட்டத்தில் மாகாணசபைகளைத் தக்கவைத்தாலே பெரிய காரியம் என்றாகியது. இப்போது மாகாணசபைகளும் கூட உருப்படியாகக் கிடைக்குமா என்று ஏங்குகின்ற அளவுக்கு நிலையை மாறியுள்ளது. ஆக, தனியான நிழல் அரசு ஒன்றை நிறுவி நடத்தும் அளவுக்கு சென்ற – தமக்குச் சுயநிர்ணய உரிமை இருப்பதாக வாதிடும் - தமிழர்களால், இன்று தமக்கான உரிமைகளை உறுதிப்படுத்தவோ நிர்ணயிக்கவோ முடியாதளவுக்கு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பலவீனத்துக்கு அடிப்படைக் காரணம், போரின் முடிவு தான்.
விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் இருந்தவரை, தமிழரின் உரிமைகள் சார்ந்து சிந்திக்கப்பட்ட விதத்துக்கும் இப்போது அது அணுகப்படுகின்ற விதத்துக்கும் இடையில் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கலாம்.
அதற்காக விடுதலைப் புலிகளின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தவில்லை.
ஆனால் அவர்களின் பலம் தமிழர் பிரச்சினையை இலங்கை அரசும், சர்வதேசமும் அணுகும் விதத்தில் ஒரு சமநிலைப் போக்கை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தியது.
அந்த ஆயுதபலம் தான், தமிழர் பிரச்சினைக்கு உயர்ந்தபட்சத் தீர்வு ஒன்றைப் பற்றிய சிந்தனைக்கு வழிவகுத்தது.
இன்று அந்தப் பலம் களத்தில் இருந்து அகற்றப்பட்டதும், வரையப்படும் தீர்வுக் கோடும் சிறுத்துப் போய்விட்டது.
தமக்குச் சாதகமற்ற அதிகாரங்களில் எவற்றையெல்லாம் பிடுங்கிக் கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் பிடுங்கி விடவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்தக் கட்டத்தில் அரசாங்கம் தனது கடந்தகால வாக்குறுதிகள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தயாராக இல்லை. அவையெல்லாவற்றையும், இப்போது தாம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளாகவும் அது உணரவில்லை.
13வது திருத்தச்சட்டத்தை மட்டுமல்ல அதற்கு அப்பாலும் சென்று நடைமுறைப்படுத்துவதாக, இந்தியாவுக்கு ஒரு வாக்குறுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னர் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது மாகாணசபைகளின் அத்திவாரத்தையே பெயர்த்தெடுகிறது அவரது அரசாங்கம். 13வது திருத்தத்துக்கு அப்பால் என்றால் அது காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத தீர்வு தான் என்று இப்போது வியாக்கியானம் வேறு கொடுக்கப்படுகிறது. இரண்டாவது சபை ஒன்றை அமைப்பது தான் 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு என்றால், அந்த இரண்டாவது சபையால் தமிழருக்கு என்ற அதிகாரங்கள், பாதுகாப்புக் கிடைக்கப் போகிறது என்றால், அதற்குப் பதில் இல்லை. இப்போது இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாரில்லை என்று அரசாங்கம் சொல்லாமல் செய்து காட்டி வருகிறது. 13வது திருத்தத்தின் அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ளும் முயற்சிகள் அதனைச் சார்ந்தவை தான்.
இந்தியாவுக்கு மட்டும் இந்த நிலை ஏற்பட்டிருக்கவில்லை.
உலக வல்லரசான அமெரிக்காவினது நிலையும் இதுவே தான்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அமெரிக்கா பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனிதஉரிமைகள் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியவற்றை வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரசாங்கமோ அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. பல விடயங்களை நேரடியாகவே நிராகரித்தும் வருகிறது. நிலையான அமைதியை உருவாக்கத் தவறினால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எப்போது அமெரிக்கா எச்சரித்ததோ, அப்போதே, இலங்கையில் அமைதி ஏற்படும் என்ற அதன் எதிர்பார்ப்பு உடைந்து போய் விட்டது. அதாவது புலிகளுக்குப் பின்னர் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு கருகிப் போய் விட்டது.
கடந்த வாரம் அலரிமாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் எல்லாம், போரை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். அவையெல்லாவற்றையும் மீறியே போரை நடத்தி வெற்றி கண்டதாகவும் அவர் கூறியிருந்தார். போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்த நாடுகளுக்கு, தீவிரவாதத்தை அழிப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் தனக்கு தெளிவான ஆணையை வழங்கியிருப்பதாகவும், அதனை நிறைவேற்றுவது தனது கடமை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டார். இதே மக்கள் ஆணை பற்றிய வாதத்தை, மீண்டும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த அரசாங்கம் முன்வைக்காமல் இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காணும் கடப்பாட்டில் இருந்து எப்போதோ விலகிச் சென்று விட்டது.
போர் எப்போது முடிவுக்கு வந்ததோ அப்போதே, பெரும்பான்மையினரின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசாங்கமாக இது மாறிவிட்டது. இத்தகைய நிலையில், இலங்கையில் நிலையான அமைதி ஏற்படும் என்பது பற்றி கனவு கண்ட நாடுகள் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டியதை தவிர வேறு வழியில்லை.
.jpg)
.jpg)


0 comments:
Post a Comment