சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, July 2, 2013

13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்காக நாளை கொழும்பில் போராட்டம்!

By on 4:08 AM



 
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாப்பதற்காக மக்கள் போராட்டம் நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக நவசமசமாஜ கட்சியின் பொது செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
   
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
கிழக்கில் அசாத்சாலியை கௌரவிக்குமுகமாக நடைபெற்ற கூட்டங்களில் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பிலுள்ள கட்சிகளும் பங்கெடுத்தன. அந்த வகையில் நாம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் 13 ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது குறித்தும் பேசினோம். இந்நிலையில் எமது கூட்டங்களை குழப்புவதற்கு செயற்பாடுகள் இடம்பெற்றன. இவ்வாறான விடயங்களுக்கு மத்தியில் கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் 1500 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடிக் கூட்டத்தை குழப்புவதற்கு 10க்கு மேற்பட்டவர்கள் எமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். திட்டமிட்டு கொண்டு வந்து விடப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை மக்கள் விரட்டியதுடன் எம்மை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மக்கள் பொய் பிரசாரங்களை புறந்தள்ளியமை எமக்கு கிடைத்த வெற்றியாகும். கிண்ணியா கூட்டத்தை குழப்புவதற்காக அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பல சிரமங்களின் மத்தியில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்புகளை நாம் நடத்தினோம்.

13 ஆவது திருத்தத்தினை பாதுகாப்பதற்கான மக்கள் போராட்டம் நாளை புதன்கிழமை புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. மக்களிடம் கையெழுத்து பெறும் இப்போராட்டத்தில் 13 ஐ பாதுகாக்க வேண்டுமென எண்ணம் கொண்ட அனைத்து தரப்பினரும் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். இன ஐக்கியத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்குபற்றாவிடில் இலங்கையில் மிஞ்சப்போவது ஒன்றுமில்லை என்றார்.

0 comments:

Post a Comment