சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, September 14, 2013

கண்டியில் அடை மழை; இயல்பு நிலை பாதிப்பு

By on 8:56 PM

கடந்த இரண்டு மூன்று தினங்களாக கண்டி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் சீரற்ற கால நிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறியளவிலான மண் சரிவுகள் - மரங்கள் சரிந்துள்ளமையால் வாகனப் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பல பாடசாலைகளில் மாணவர்களின் வரவுகளும் அரச அலுவலகங்கள் சிலவற்றில் ஊழியர்களின் வரவுகளும் குறைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலப்பிட்டிய கினிகத்தேனை பாதையில் மீபிட்டிய என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு இன்று அதிகாலை முதல் இப்பாதையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கண்டி - திகண பிரதான பாதையில் தென்னக்கும்புர என்ற இடத்தில் பாரிய மரம் ஒன்று சரிந்ததில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இது இவ்வாறிருக்க கண்டி லேவல்ல வீதியில் பாரிய வளைவு ஒன்றின் பாதை பாதுகாப்பு மதில் உடைந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதையில் ஒரு பகுதி எவ்வேளையிலும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

இதேவேளை மகாவலி ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொல்கொல்லை அணைக்கட்டின் வான் கதவுகள் முறையாக திறக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததுடன் அணைக்கட்டின் வெளிப்பகுதியின் தாழ்வான பகுதிகளில் நீர் பெருக்கெடுத்துச் செல்லலாம். எனவே கரையோரம் குடியிருப்பவர்களும் அன்றாட தேவைகளுக்காக ஆற்றிற்கு செல்பவர்களும் இத்தினங்களில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என அணைக்கட்டு பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment