ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் முல்லா மீது போர்க் குற்றம் சுமத்தி பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு நடந்த பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டு போர் குற்றம் சுமத்தப்பட்டது.
காதர் முல்லாவுக்கு எதிரான ஆறு வழக்குகளில் ஐந்து வழக்குகளிலும் அவர் மீதான குற்றம் நிரூபணமானதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முஸம்மில் ஹுஸைன் தலைமையிலான நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் முல்லாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். முல்லாவிற்கு பங்களாதேஷின் சர்ச்சைக்குரிய விசாரணை குழு ஆயுள்தண்டனை விதித்து கடந்த பெப்ருவரி மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முல்லா அளித்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது. முல்லாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு அளித்த மேல்முறையீட்டில் தற்போது உச்சநீதிமன்றம் முல்லாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
முல்லாவுக்கு இனி ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கலாம். போர்க் குற்றம் தொடர்பாக பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் அளித்துள்ள முதல் மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும். இது தொடர்பான வழக்கில் போர்க் குற்றவிசாரணைக்குழு ஜமாஅத்தே இஸ்லாமியின் நான்கு மூத்த தலைவர்களுக்கு மரண தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்திருந்தது.
போர்க் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்ய 2010-ஆம் ஆண்டு ஷேக் ஹஸீனா அரசு சர்ச்சைக்குரிய விசாரணைக்குழுவை நியமித்தது. அதன் தீர்ப்பாயத்திற்கு எதிராக ஆம்னஸ்டி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால், நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் எழுந்த எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு விசாரணையை தொடர்கிறது ஷேக் ஹஸீனா அரசு.
0 comments:
Post a Comment