சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 12, 2013

நாட்டில் ஜனநாயக அரசியல் எங்கே?

By on 3:58 AM

தேர்தல் பிரசாரங்களில் மாகாண ஆளுனர்கள் ஈடுபடக் கூடாது - தேர்தல் ஆணையாளர்

மாகாண ஆளுனர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆளுனர்கள் கடமை தவறிச் செயற்படக் கூடாது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஆளுனர்கள் ஈடபடக் கூடாது. வடக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுனர்கள் ஆளும் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஆளுனர்கள் பங்கேற்பதனை தவிர்க்க வேண்டும். வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமேல் மாகாண ஆளுனர் திஸ்ஸ பலல்ல ஆகியோர் தங்களது பதவிகளுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
 

எதிர்காலத்தில் இவ்வாறு செயற்படக் கூடாது என கட்சி செயலாளர்கள் ஊடாக அறிவித்துள்ளேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் நிறைவேற்று அதிகாரம் ஆளுனர்களுக்கே வழங்கப்டுகின்றது.


எனவே, ஆளுனர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. என்றார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.



என்னிடம் அதிகாரம் உள்ளது எந்த சட்டமும் என்னை தடுக்க முடியாது - சந்திரசிறி



சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியாக, தன்னால் எங்கும் செல்வதற்கு உரிமை உள்ளது என்றும் தன்னை யாரும் தடுக்க முடியாது என்றும், வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடக்கில், சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச பங்கேற்ற ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் பங்கேற்பது தொடர்பாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். "என்னிடம் அதிகாரம் உள்ளது. யாருடனும் எங்கேயும் நான் செல்லமுடியும். சிறிலங்கா அதிபரும், அவரது சகோதரர் பசிலும் வடக்கை அபிவிருத்தி செய்ய கடினமாக உழைத்து வரும் நிலையில் அவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன்.

 

அவர்கள் வடக்கிற்கு வரும் போது அவர்களுடன் நான் இருப்பேன். எனது பரப்புரைகளை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கொண்டு சென்றாலும் நான் கவலைப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் நான் தான் ஆளுனர். அங்கு எனது பயணங்களைத் தடுப்பதற்கு எந்த சட்டமும் கிடையாது. சிறிலங்கா அதிபரின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு அரசியல்உரிமை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


அதேவேளை, அரச அதிகாரியாக உள்ள வடக்கு மாகாண ஆளுனர் ஆளும்கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்ற நிலையில் - அவர் சிறிலங்கா அதிபரின் பிரதிநிதி என்று அரசதரப்பு கூறுகிறது.


இந்தநிலையில் தன்னால் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும், மனித உரிமை ஆணைக்குழுவே இதுகுறித்து தீர்மானிக்கும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment