சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, September 25, 2013

கண்டியில் கைநழுவிப்போன முஸ்லிம் பிரதிநிதித்துவம்

By on 10:10 AM

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிக்கட்சியில் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம்களும் , முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட ஒரு வருமாக மூன்று முஸ்லிம்கள் வெற்றியீட்டியுள்ளனர்.

இத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சகல முஸ்லிம் பிரதேசங்களில் பொதுவாக எழுபது வீதமான வாக்குகள் பாவிக்கப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மற்றைய சமூகங்களை விட முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்ததை காணக்கூடியதாகவுள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் முஸ்லிம் வாக்காளர்களில் சுமார் 95 ஆயிரம் வாக்குகள் பாவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் சுமார் தொன்னுறாயிரம் வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாக்குகளில் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கும் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் பிரிந்து சென்றுள்ளதாக முஸ்லிம் அபேட்சகர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளை கொண்டு கணக்கிட முடிகிறது.

கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் பதினான்கு வீதம் முஸ்லிம் வாக்குகளாகும். அவ்வகையில் பார்க்கும் போது நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தால் ஓரளவு திருப்திப்படக்கூடியதாக இருக்கும். மத்திய மாகாணத்தைப் பொறுத்த வரையில் இது போதுமானதாக இல்லை. ஏனென்றால் மாத்தளை மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் பதிவாகி இருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவாகவில்லை. மத்திய மாகாண சபைக்கு குறைந்தது ஆறு முஸ்லிம் உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்பட்டால் தான் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப சரியான பிரதி நிதித்துவமாகும்.
ஆகவே கண்டி மாவட்டத்தில் மேலும் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை தெரிவு செய்து கொள்ள சந்தர்ப்பம் இருந்தும் விருப்பு வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்படாத காரணத்தால் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்துள்ளதால் எப்படி விருப்பு வாக்குகள் பிரிந்து சென்றாலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள போதுமானதாக இல்லை. இருந்தாலும் இக்கட்சிக்கு வாக்களித்தவர்களும் இக்கட்சியில் போட்டியிட்ட மூன்று அபேட்சகர்களும் பிரிந்து சென்றதால் விருப்பு வாக்குகள் சிதறிடிக்கப்பட்டுள்ளதாக விளங்குகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள சுமார் 65 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களில் சுமார் 175000 விருப்பு வாக்குகள் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் அஸாத் சாலி அவர்களுக்கு 55000 வாக்குகளும் லாபிர் ஹாஜியாருக்கு 45000 வாக்குகளும் சென்ற பின் மீதமாகவுள்ள சுமார் 75 ஆயிரம் விருப்பு வாக்குகளே மற்றைய ஐந்து முஸ்லிம் அபேட்சகர்களுக்கு பிரிந்து சென்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட இருவருக்கு ஏராளமான விருப்பு வாக்குகளை வழங்கியமை மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்காது ஒரு விருப்பு வாக்கை மட்டும் பாவித்தமை, விருப்பு வாக்குகள் ஓரளவு சரி சமமாக பிரிந்து செல்லாமை, ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் குறைந்துள்ளது. அப்படி அல்லாது ஓரளவு விருப்பு வாக்குகள் சமமாக பிரிந்து சென்று மூன்று விருப்பு வாக்குகளும் பாவிக்கப்பட்டிருந்தால் ஐக்கிய தேசிய கட்சி மூலம் மேலும் மூன்று பிரதிநிதித்துவத்தை பெறக்கூடியதாக இருந்திருக்கும்.

இதிலும் முக்கியமாக கவனிக்கக்கூடிய விடயம், கண்டி மாவட்டத்தில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் சுமார் 38 ஆயிரம் வாக்குகள் அக்குறணை உள்ளடங்கிய  ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பதிவாகியுள்ளது. இத்தேர்தலில் இருந்து 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் 1993ஆம், 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இரண்டு உறுப்பினர் வீதமும் 2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஒருவர் வீதமும் தெரிவு செய்யப்பட்ட போதும் இம்முறை தெரிவு செய்யப்படவில்லை.

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் சுமார் 18ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள போதும் அக்கட்சியில் போட்டியிட்ட ஹாரிஸ்பத்துவ முஸ்லிம் அபேட்சகர் சுமார் ஒன்பதாயிரம் விருப்பு வாக்குகளையே தனது சொந்த தொகுதியில் பெறக்கூடியதாக இருந்துள்ளது. அப்படியானால் சுமார் 50 வீதமானவர்கள் தனது சொந்த தொகுதி அபேட்சகருக்கு விருப்பு வாக்குகளை வழங்காமை தெரிய வருகின்றது.

அப்படி அல்லாது இக்கட்சிக்கு இத்தொகுதியில் இருந்து வாக்களித்த முஸ்லிம் வாக்காளர்களில் குறைந்தது 75 வீதமானோர் தனது சொந்த தொகுதி அபேட்சகருக்கு ஒரு விருப்பு வாக்கை வழங்கியிருந்தால் தொடர்ச்சியாக பாதுகாத்து வந்த பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடிந்திருக்கும்.
அந்த வகையில் உடுநுவர முஸ்லிம்கள் தொடர்ச்சியாக தமது பிரதி நிதித்துவத்தை பாதுகாத்து வந்துள்ளதுடன் இம்முறையும் பாதுகாத்துக் கொண்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் இரண்டாவது பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் இத்தொகுதியிலே பதிவாகியுள்ளனர்.

இத்தொகுதியில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளது. இதுதவிர முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கம்பளை, பாத்ததும்பர போன்ற தொகுதிகளில் இருந்தும் எந்த ஒரு முஸ்லிம் அபேட்சகர்களும் தெரிவு செய்யப்படவில்லை. எப்படியோ முஸ்லிம் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களித்து இருந்தால் குறைந்தது மேலும் இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து இருக்க முடியும்.

1 comments:

  1. Mattiya mahaana sanattohai veedamum mahana sabai uruppinar veedamum.
    Inam %-mahaana sabai aasanam- aasana %
    Sinhala 65%-42 seat-72.4%.
    Tamil 14%-13 seat-22.4%.
    Muslim 20%-3 seat-5%.

    ReplyDelete