"பௌத்தர்கள் எதிர்நோக்கும் மிக அபாயகரமான சவால் முஸ்லிம் அடிப்படைவாதமாகும்"
முஸ்லிம் அடிப்படை வாதிகளின் அபாயகரமான சவால்களுக்கு முகங் கொடுக்கும் அஹிம்சை வாதிகளான பௌத்தர்கள், தமது பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். உணர்வுள்ள பௌத்தர்கள் தமது பிரச்சினைகளுக்கு மோதலினூடாகத் தீர்வு காண்பர் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானாசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்;.
கிழக்கிலுள்ள 10 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், சவூதி அரேபியாவிலிருந்து உதவிகளைப் பெற்று பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அது மட்டுமல்லாது, தமது சமய நியதிகளையும் இலங்கை அரசமைப்பின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் எவ்வித அச்சமும் இன்றிச் செயற்படுகின்றனர் எனவும் கொழும்பு - 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள நூலகச் சேவை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் மாலை (30.08.13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது ஞானாசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள பௌத்தர்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். அதுபோலவே இலங்கையிலுள்ள பௌத்தர்களும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். உலகில், சமாதானம், நல்லிணக்கம் எனப் பேசிக்கொண்டிருப்பவர்கள் பௌத்த சமயத்துக்கு எதிராக செயற்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
அன்று கத்தி, துப்பாக்கிகளூடாக பௌத்தர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், இன்று வேறு வடிவத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
பௌத்தர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள இந்த அரசின் ஆட்சியில்தான் பௌத்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் பௌத்தர்களின் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். எனினும் பௌத்தர்கள் எதிர்நோக்கும் மிக அபாயகரமான சவால் முஸ்லிம் அடிப்படைவாதமாகும் என குற்றம் சுமத்தியுள்ளார்.
பௌத்தரும் ஆயுதம் ஏந்துவர்
முஸ்லிம் அடிப்படைவாதத்தால் அச்சுறுத்தப்படும் பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்தர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் உருவாகும். ஏனெனில் எமது மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.
பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காணாவிட்டால், உணர்வுள்ள பௌத்த மக்கள் மோதலினூடாகவே அதற்குத் தீர்வு காண்பர். அந்த நிலை ஏற்படாது என நாம் நினைக்க முடியாது எனத் தெரிவித்தார் ஞானாசார தேரர். (GTN)

0 comments:
Post a Comment