சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, November 1, 2013

சிராஸ் மீரா சாஹிப் இன்று தொடக்கம் மேயராக பதவி வகிக்க முடியாது

By on 5:24 AM
சுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று (01) நவம்பர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.


இதனையும் மீறி அவர் மேயராக செயற்பட முற்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் பணித்ததுடன் அதற்கு ஒக்டோபர் 31 வரை காலக்கெடு விதித்திருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


"கட்சியின் கட்டுக்கோப்பை மீறி- தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சாய்ந்தமருதில் பிரதேசவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் சிராஸ் மீராசாஹிப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


இதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுள் முரண்பாடுகளையும் தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்த அவர் முனைந்துள்ளார்.


ஆகையினால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தற்துணிவு அதிகாரத்தின் பேரில் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் என்பவர் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது என பிரகடனம் செய்கிறேன்.


அத்துடன் கல்முனை மாநகர சபையின் எமது கட்சி சார்பான ஏனைய பத்து உறுப்பினர்களும் அவருக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் அதனை மீறி அவருடன் ஒத்துழைக்கும் உறுப்பினர்கள் மீது எமது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் கண்டிப்பான உத்தரவை விடுக்கின்றேன்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது விசேட அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment