சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, November 16, 2013

நீங்கள் அடிமையாக அழைத்து வந்த மலையக மக்கள் இன்னும் அதே நிலையில்...!

By on 11:13 PM

இளவரசர் சார்ள்ஸ் அவர்களே! நீங்கள் அடிமைகாக அழைத்து வந்த மலையக மக்கள் இன்னும் அதே நிலையில் பொதுநலவாய மாநாடு என்பது அடிமையாய் வைத்திருந்தவர்களும், அடிமையாய் இருந்தவர்களும் ஒன்று கூடும் கூட்டமைப்பாகும்.


இவர்கள் கூடிக் குழாவுவதும், புதிய உலகை சிந்திப்பதும் மகிழ்ச்சியே.
புதிய உலகின் கனவில் மிதப்பவர்களிடம் நாம் கேட்பது பொதுநலவாய மாநாடு  நிகழ்வுகளில், செயற்பாடுகளில், திட்டமிடலில் எத்தனை வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் பங்கெடுத்தார்கள்?


நடந்து முடிந்த இளைஞர் மாநாட்டில், வர்த்தக மாநாட்டில், சமூக அபிவிருத்தி வர்த்தகம் என்பவற்றில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசமும், அனைத்து வகையிலும் புறந்தள்ளப்பட்ட நிலையில் புரண்டிருக்கும் மலையகமும் எந்த வகையில் கருத்தில் கொள்ளப்பட்டன.


இவ்வேளையில் குறிப்பாக நிரந்தர தலைமைத்துவம் வகிக்கும் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக வருகை தந்திருக்கும் இளவரசர் சார்ள்சிடம் அடையாளம், சமூக ஆய்வு மையமும் இணைந்து கேட்பது,
'நாம் மலையக சமூகம் என குறிப்பிடும் மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது நினைவில் உள்ளதா?"


இந்த மக்கள் கடந்த 200 ஆண்டுகளாக நீங்கள் குதிரை லாயப்பாணியில் கட்டிய லயம் அறைகளினுள்ளேயே குடும்பங்களாக தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா?




நீங்கள் பூரண சுதந்திரம் கொடுத்த ஒரு நாட்டில் நீங்கள் அழைத்து வரப்பட்டவர்கள் நாட்டின் வளத்தை பெருக்கி அபிவிருத்தியை முன்னகர்த்திய போதும் அரசியல், பொருளாதார சுதந்திரம் இன்றி அடிமைப்பட்டு கிடப்பதை நீங்கள் அறிவீர்களா?


மலையக மக்கள் கல்வி சுகாதாரம் பொது வசதிகள் என்பவற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டு 'அரசியல் வன்புணர்ச்சிக்கு உட்படுவதை நீங்கள் அறிவீர்களா?"


இந்நாட்டில் வாழும் சிங்கள இன மக்கள் அனுபவிக்கும் "இனத்துவ பாதுகாப்பு" மலையக மக்களுக்கு கிடைக்காது இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
மலையக மக்களை ஓர் இனமாக வளர்ச்சியடைய விடாது சகல வழிகளிலும் இந்நாட்டின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்களா?



பொதுநலவாய மாநாட்டில் சுகம் காணும் சார்ள்ஸ் அவர்களே!
இவை அனைத்தையும் கருத்திற் கொள்ளாது நீங்கள் சுக சுற்றுலாவாக ஓய்வு சுகம் அனுபவிக்க நுவரெலியாவருவதை சுகம் இழந்து நிற்கும் மலையக மக்கள் சார்பில் அமைப்புகளாக நாங்கள் எதிர்க்கின்றோம்.


இலங்கை, நீங்கள் சுதந்திரம் வழங்கிய தனித்துவமிக்க ஒரு நாடாக நீங்கள் கருதி, உள்நாட்டு விடயங்களில் தலையிட விரும்பாவிட்டாலும், உங்களால் அழைத்து வரப்பட்ட ஒரு மக்கள் சமூகம் தொடர்ந்து அரசியல் ரீதியிலும், பொருளாதார சமூக கலாச்சார அபிவிருத்திக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை என்பதை கருத்திற் கொண்டு பொது நலவாய நாடுகளின் நிரந்தர தலைமை பொருப்பில் இருக்கும் மகாராணி இதில் தலையிட்டு, மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு சுதந்திர இனம் என்பதை வழியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வினயமுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


பொது நலவாயம் என்பது சிறிய, பெரிய நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்நாடுகளில் வாழும் அனைத்து இனங்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு சர்வதேச நியதிக்குற்பட்ட உரிமைகளை தமதாக்கி, வாழ்வுரிமையை பாதுகாப்பது பொது நலவாயத்தின் பண்பாகும். இதற்குள் இலங்கை வாழ் மலையக மக்களும் உள்ளடக்கப்பட வேண்டியவர்களே! 


அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம்

0 comments:

Post a Comment