சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, April 21, 2014

சவூதி: 10 மாதங்களின் பின்னர் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

By on 11:00 PM

சவூதி அரேபியாவில் இறந்த கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதோடு ஞாயிறன்று பகல் கல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபனம் மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக இப்பிரேதம் உரியவர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

அவர் கடமையாற்றிய சவூதி அரேபிய வீட்டு எஜமானின் நிதிச் செலவுடன் பிரேத பெட்டியில் பூரண சுகாதாரமுறையில் அடைக்கப்பட்ட நிலையில் கல்முனை வந்துசேர்ந்தது. கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள வீட்டில் ஒருநாள் வைக்கப்பட்டு இந்து முறைப்படி சகல கிரியைகளும் நடாத்தப்பட்ட போதிலும் பெட்டி திறக்கப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை பகல் நற்பிட்டிமுனை இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின் உறவினர்களுக்கு காட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கை வரவில்லை. கல்முனை, நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற குடும்ப பெண் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாக ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அவரின் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவர் இருதய நோய் காரணமாக இறந்துள்ளதாக கடந்த 2014 ஜனவரி 20 ஆம் திகதி மருத்துவ அறிக்கையின் பிரதிகளை வெளிநாட்டு அமைச்சு கணவருக்கு அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் உடலை உடன் இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு கேட்டு சம்மதக் கடிதத்தினை அமைச்சுக்கு கணவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை. மரணித்து சுமார் 8 மாதகாலமாகியும் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படா திருந்தது.

இதனால் அவரின் குடும்பத்தினர் செய்தவறியாது உள ரீதியாக பாதிக்கப்பட்டு ள்ளார்கள். இவர்களின் நிலமையினை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட பெண்ணின் உடலை உடன் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தருமாறு உரிய அரச அதிகாரிகளிடம் பகிரங்க வேண்டுதலை அவரது கணவர் விடுத்திருந்தார்.

2014.04.17 ஆம் திகதி கணபதிப்பிள்ளை ரமணியின் பிரேதம் இலங்கைக்கு அனுப்பப்படும் தகவல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கார்க்கோ பொதிகள் பிரிவு காரியாலயம் மூலம் எமக்கு கிடைக்கப் பெற்றது. 2014.04.19 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரமணியின் பிரேதத்தினை கணவன் கே. வேதானந்தம் பெற்றுக்கொண்டார்.

ரமணியின் பிரேதம் 10 மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நேற்றுமுன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment