உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தப்பட மாட்டாதெனவும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்துவதில் அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
தேர்தல் முறை மறுசீரமைக்கப்பட்டதற்கமையவே இத்தேர்தல்கள் இடம்பெறும் இதன் பொருட்டு இல்லை நிர்ணய விடயம் தொடர்பில் விசேட வர்த்தமானிப் பிரகடனம் அடுத்த சில வாரங்களுக்கிடையில் வெளியிடப் படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார்.
2012 / 22 ஆம் இலக்க திருத்தத்துக்கமைய உள்ளூராட்சித் தேர்தல்கள் புதிய முறையில் இடம்பெறும். கிராமிய மட்ட மக்கள் தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொருட்டு 70 சதவீதம் வட்டார மட்டத்திலும் 30 சத வீதம் விகிதாசார அடிப்படையிலும் தேர்தல் இடம்பெறும்.
எல்லை நிர்ணய விவகாரம் முடிக்கு வந்துள்ளது. எனினும் நுவரெலியா மற்றும் கிழக்கில் சில பிரதேசங்களில் முரண்பாடுகள் காணப் படுவது உண்மை.
அவை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஐவர் கொண்ட அமைச்சரவை உப குழுவை அமைக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.
இக்குழு எனது கண்காணிப்பில் இயங்கும். இக்குழு விரைவில் நியமிக்கப்படும் எவ்வாறெனினும் டிசம்பர் இறுதிக்குள் அனைத்தும் முடிவுக்குவரும் என்று நம்புகின்றோம்.
இந்த கலப்புத் தேர்தல் முறைக்கு ஏதுவாக எல்லை நிர்ணய விடயம் 2014 ஜனவரியில் அமைச்சர் அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது முடிவுக்கு வரவில்லை.
பின்னர் கடந்த ஆட்சியில் அமைச்சர் கரு ஜயசூரிய எல்லை நிர்ணய முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களுக் கிடையில் அனைத்தும் முடிவுக்கு வரும். எல்லை நிர்ணய விவ காரம் 90 சதவீதம் நிறைவு 10 சதவீதமே மீதமுள்ளது. டிசம்பருக்குள் முடிவு வந்துவிடும்.
தேர்தலை மார்ச்சில் நடத்த தேர்தல்கள் ஆணையாளர் தயாராகி வருகின்றார். தேர்தலைப் பின்போடும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. சிலர் இது தொடர்பில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது சுயநலநோக்கத்தை கொண்டதாகும்.
தற்போதைய நிலையில் சட்ட ரீதியாக பழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது. கலப்பு முறையிலேயே நடத்தியாக வேண்டும். 20வது அரசிய லமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறை வேற்றப்பட்டுள்ளது.
கிராமிய மட்டத்தில் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிவகுப்பதே எமது இலக்கு. அதில் அரசு வெற்றியீட்டியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி - பிரதமர் இருவரதும் ஆலோசனைப்படியே 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் உள் நோக்கம் எதுவும் கிடையாது.
மார்ச்சில் தேர்தல் நடக்கும் போது இவற்றுக்கும் நடக்கும். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

0 comments:
Post a Comment