சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, October 30, 2015

வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு வேண்டும்

By on 4:31 PM

ஜனாதிபதி, பிரதமருக்கு அமைச்சர் ரிஷாத் கடிதம்

வெளியேற்றப்பட்ட வடபுலத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணும் பொருட்டு விசேட குழுவொன்றை அமைத்து துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

26வது வருடத்திலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசி காலம் கடத்தாமல் அந்த மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த உதவுமாறு தமிழ்ச் சமூகங்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி நேற்று வெள்ளிக்கிழமை தனது அமைச்சு கேட்போர் கூடத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1990 க்குப் பிறகு ஆண்டு தோறும் அக்டோபர் 30 ஆம் திகதி வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தினமாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக இந்த வலியை தனது மக்களால் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. இந்த 25வது வருடத்தோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

வெளியேற்றப்பட்ட அல்லது யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் குடியேறத் தேவையான உரிய நடவடிக்கைகளை அரசுதான் எடுத்தாக வேண்டும்.

கடந்த ஆட்சியின்போது எனது அமைச்சினூடாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் சில இனவாத சக்திகளின் செயற்பாடுகளால் அது சாத்தியப்படாமல் போனது. ஆனால் எனது முயற்சியை நான் கைவிடவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்களின் ஆதரவை நாம் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பெற்றுக்கொடுத்து அவரது வெற்றியின் பங்காளிகளாக செயற்பட்டோம்.

அதேபோன்று பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி, பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மக்களாணையை பெற்று தேசிய அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைத்தோம்.

இவ்வாறான நிலையில் வெளி யேற்றப்பட்ட மன்னார், வவுனியா உள்ளிட்ட அனைத்து வடபுலத்து முஸ்லிம்களும் தமது தாயகத்தில் மீளக்குடியேற வழி செய்ய வேண்டிய கடப்பாட்டை ஜனாதிபதியும், பிரதமரும் கொண்டிருக்கின்றனர்.

இதனடிப்படையிலேயே விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தி அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்யக்கூடியதாக மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் நான் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைத் திருக்கின்றேன்.

இத்திட்டம் முன்னெடுக்கப்படும் போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களும்இ தமிழ்ச் சங்கத்தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தரப்புகளும் வெறும் பேச்சளவில் முஸ்லிம்களுக்கு ஆதரவை வெளிப் படுத்துவதை நிறுத்தி செயலில் காட்டி தமிழ் - முஸ்லிம் உறவு மீண்டும் பல மடைய ஒத்துழைப்பதே மிக முக்கிய மானதாகும்.

26வது வருடத்திலும் மீள்குடியேற்ற நினைவு கூரல் இடம்பெறக்கூடாது. தொடர்ந்து இந்த வலியை எம்மால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.

கால் நூற்றாண்டை நிறைவு செய்துள்ள வடபுல முஸ்லிம்கள் தமது தாயக மண்ணில் மீள்குடியேற ஆவலாக உள்ளனர். அதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடைபெற வேண்டும். வடக்கில் மீள்குடியேற 35 ஆயிரம் குடும்பங்கள் தமது பதிவுகளை செய்துள்ளனர். இது அண்ணளவாக இரு இலட்சம் முஸ்லிம்களை கொண்டதாகும்.

இந்த மக்கள் அடிப்படையில் காணிப்பிரச்சினை, வீட்டு வசதியின்மை, வாழ்வாதார மேம்பாடுகள் இன்மை மற் றும் அடிப்படை வசதிகளின்றி மீள்குடி யேறிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். பல ஆயிரம் குடும்பங்கள் வடக்கில் காணப்படும் இனவாத சக்திகளின் அடம்பிடிப்பால் தமது பணிகளை செய் வதில் அல்லல்படுகின்றனர்.

இந்தநிலை மாற்றப்படாத வரை முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சாத்தியப்பாட்டினை எட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் வடபுல முஸ்லிம்களின் தாயக கோட்பாட்டு நியாயத்தை அரசாங்கமும் அரசியல் தலைமைகளும் உள்ளூர உணர்ந்து அதற்கான நிலையானதொரு பொறி முறையொன்றினை முன்னெடுக்காத வரை வெறும் வார்த்தைகளாலும், நினைவு நாட்களாலும் இந்த இலக்கை எட்ட முடியாது.

எனவே இந்த வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 25 வருடம் கண்ட இழப்புக்களை மதிப்பீடு செய்து இதற்கான பரிகாரத்தை பெற்றுக்கொடுக்க இன்றைய தினம் தடம் பதிக்க வேண்டும் என்பதே எமது அவாவாகும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment