அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் 19 உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இந்தத் தெரிவுக்குழுவானது அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவின் தலைமையில், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, W.D.J.செனிவிரெட்ன, அனுரா பிரியதர்சன யாப்ப, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிறேம்ஜெயன்ந், A.L.M.அதாவுல்லா,D.E.W. குணசேகர, றிச்சாட் பதியுதீன், சம்பிக்க றணவக்க, விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சஇ லக்ஸ்மன் செனிவிரெட்ன, வாசுதேவ நாணயக்கார, முத்து சவலிங்கம், சுதர்சினி பெர்ணான்டோப்பிள்ள, ஜானக பண்டார ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
இந்த பெயர்ப் பட்டியலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் காணப்படவில்லை. எதிர்க்கட்சிகள் தம்மால் நியமிக்கப்படும் தெரிவுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை கையளித்த பின்னர் அவர்களின் பெயர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
தன்னால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றும் வரை தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை புறக்கணிப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் அறிவித்திருந்தது. எதிர்காலத்தில் 13வது திருத்தச்சட்டத்தின் முக்கிய சரத்துக்கள் சீரமைக்கப்படும் அதேவேளையில்இ வடக்கு மாகாண சபைத் தேர்தல் உள்ளடங்கலாக மூன்று மாகாணத் தேர்தல்களும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் நடைமுறைக்கு ஏற்ப செப்ரெம்பரில் நடாத்தப்படும் என நேற்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்களின் அனுமதியில்லாது 13வது திருத்தச் சட்டம் மற்றும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பன அமுலாக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக மற்றும் தகவற்துறை அமைச்சருமான கெகலிய றம்புக்வெல தெரிவுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு': த.தே.கூ
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை இலங்கை அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. இந்த தெரிவுக்குழுவில் சேரும்படி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு வந்ததாகவும் ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த சம்பந்தர் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.
வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் இலங்கை திரும்பிய பிறகுஇ எல்லோரும் கலந்துபேசி இந்த தெரிவுக்குழு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவிருப்பதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
இந்திய பயணத்தின்போது இலங்கை அரசின் இந்த தெரிவுக்குழு குறித்து இந்திய அரசிடம் தாங்கள் முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை என்று கூறிய சம்பந்தர்இ பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் தொடர்பாகவே இந்திய பிரதமர் உள்ளிட்ட இந்திய தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் விரிவாக பேசியதாகவும் கூறினார்.
தெரிவுக்குழுவில் இடமில்லை : முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி
இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதேவேளை முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தமிழோசையிடம் தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி அவர்கள் சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும் அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால் அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.
இப்படியான சூழ்நிலையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு என்ன சாதிக்கப்போகிறது. தமிழ்தேசிய கூட்டமைப்பினை எவ்வாராவது தெரிவுக்குழுவில் சேர்த்துக்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டம் தவிடு போடியாகி விடுமா?


.jpg)


0 comments:
Post a Comment