தெல்தோட்டையை சேர்ந்த ஆசிரியர் க.பிரபாகரனின் இலங்கை அரசியல் திட்ட வரலாறு எனும் நூல் 17.08.2013; வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் உயர்கல்வி அமைச்சர் ளு.டீ.திசாநாயக்க அவர்கள் கலந்துக் கொண்டார்.
இலங்கை கல்வி புலத்தை பொருத்தவரையில் இலவச கல்வி முறை அமுல்படுத்தப்பட்ட போதிலும் தமிழ் மொழி மூலமான உயர்தர வகுப்பு மாணவர்களும், பட்டப்படிப்பு மாணவர்களும் போதிய கற்றல் வளங்களை பெற்றுக் கொள்வதில் நீண்ட காலமாக பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கை அரசியல் பாடப்பரப்பில் ஒப்பீட்டு ரீதியாக கேட்கப்படும் வினாக்களுக்கு தமிழ் மொழி மூலமான மாணவர்கள் தர்க்க ரீதியாக விடையளிக்கும் நிலை குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
உயர்தர, பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஒரு தசாப்பதத்திற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவத்தைக் கொண்ட ஆசிரியர் இதற்கு முன்னர் பல கையேட்டு பிரதிகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவை இலங்கையில் மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, போன்ற பல்வேறு பிரதேசங்களில் மாணவர்களின் அமோக வரவேற்பினை பெற்றிருப்பதை அறிய முடிகின்றது. தற்போது ஆசிரியரால் எழுதப்பட்டுள்ள இலங்கை அரசியல் திட்ட வரலாறு எனும் நூலானாது, பல்வேறு நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுதப்பட்ட ஒரு நூலாகும். மாணவர்களின் அறிவுப் பசிக்கு விருந்தளிக்க கூடிய இந்நூல் இலகு மொழி நடையில் எழுதப்பட்டுள்ளதோடு 1796 முதல் 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 18ம் சீர்த்திருத்தம் வரையிலான சகல விடயங்களையும் தர்க்க ரீதியாகவும், பரீட்சை நோக்கின் அடிப்படையிலும் ஆய்வு செய்கின்ற ஒரு நூலாக காணப்படுகின்றது. இந்நூலுக்கான சிறந்த அணிந்துரையை பேராதனை பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர் அமரர் சிவயோகலிங்கம் அவர்கள் வழங்கியிருப்பது நூலை மேலும் சிறப்பிப்பதாக அமைகின்றது. வெளியீட்டு விழாவின் போது ஆய்வுரையை பேராதனை பழ்கலைகழக முதுமானி மாணவனும் நூல் ஆய்வாளருமான பி.இராமகிருஸ்ணன் நிகழ்த்தினார்
மலையகத்தை பொருத்த வரையில் உயர்தர வகுப்பு பாடரீதியாக வெளியாகும் மிகப்பெரிய ஒரு நூலாகும். மலையகத்தவர்களும் எழுத்தாற்றல் உடையவர்கள், என்பதை நிரூபிப்பதாக இந்நூல் அமையும் என்பதில் ஐயமில்லை. நூல் வெளியீட்டு விழாவில் தெல்தோட்டை பிரதேச அதிபர்கள், ஆசிரியர்கள், மாத்திரமன்றி நாட்டின் பல பாகங்களிலிருந்தும், பலர் கலந்துக் கொண்டனர். தமிழ் மொழி மூல மாணவர்கனை பொருத்த வரையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள இத்தகைய நூல்கள் மென்மேலும் வெளியிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(R.M. ரிஸ்வான், M.S.M. ஸியாத்)


0 comments:
Post a Comment