தெல்தோட்டை தாரிக் ஸம்ஊன்
விரிவுரையாளர்
இர்பானிய்யா அரபுக் கலாசாலை
கெகுணகொல்ல.
விரிவுரையாளர்
இர்பானிய்யா அரபுக் கலாசாலை
கெகுணகொல்ல.
அரசியல் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு சமாச்சாரம், அது ஒரு சாக்கடை என்கின்ற கருத்து நிலைகளுக்கு அப்பால் அது முஸ்லிமின் அடிப்படை உரிமையாகும்.பாரம்பரிய நெறிமுறைகளால் ஆளப்படும் அல்லது பார்க்கப்படும் அரசியலாக அல்லாது இஸ்லாம் வழிமொழிந்துள்ள விழுமியங்களால் அது பார்க்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில் கட்சி அரசியல் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொள்வோம்.
முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம்களும்
இலங்கை அரசியல் கட்டமைப்பில் கட்சி அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.மட்டுமல்ல நவீன ஜனநாயக மதிப்பீட்டில் கட்சி அரசியல் மிக முக்கியம் வாய்ந்ததும் கூட.
இலங்கை சுதந்திரம் பெற்ற பொழுது தேசிய அரசியலில் பங்கேற்ற கட்சிகளின் அடையாளம் பொதுமையானதாகவே இருந்தது.இனப்பிரச்சினையும் இனமுரண்பாடுகளும் சிறுபான்மையினர், அரசியலில் தமக்கென்று கட்சிகளை உருவாக்கிக் கொள்வதற்கு நியாயத்தை உண்டுபண்ணியது. இனப்பிரச்சினை கொதிநிலையில் இருந்த போது முஸ்லிம் அரசியல் தமக்கென்று தனித்துவ கட்சியொன்றை உருவாக்கிக் கொண்டது.
வரலாற்றில் இந்த சந்திதிரும்பும் நிலை முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை ஜனநாயக நீரோட்டத்திற்கு திருப்புவதற்கு வழிவகுத்தது. பெரும் வரலாற்று விபத்திலிருந்து சமூகத்தை பாதுகாத்தது என்றே சொல்ல வேண்டும்.
முஸ்லிம் தனிக்கட்சியின் வெற்றிக்கு சமூகத்தில் பொதுமையாக காணப்பட்ட இஸ்லாமிய உணர்வலைகளின் நாடித்துடிப்பை அதன் தலைமை சரியாக கையாண்டது. மிக குறுகிய காலத்தில் தேசிய கட்சியாக அது உயர்ந்ததற்கு காரணம் அது கையாண்ட மிகை இஸ்லாமிய கோஷங்களே என்றால் மிகையாகாது. இது முஸ்லிம் சமூக உளவியலில் புதிய வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
ஆயினும் இந்த கோஷங்களாலும் முழக்கங்களாலும் பெறப்பட்ட மக்கள் பலம் (சில சந்தர்ப்பங்களை தவிர) வீணடிக்கப்பட்டன என்பதே உண்மை. முழக்கங்களில் இருந்த வேகம் அரசியல் கொள்கையில் இல்லாமல் போனதே துரதிஷ்டமாகும்.
முஸ்லிம் தனிக்கட்சி மீதுள்ள இந்த விமர்சனங்களையும் தாண்டி அதன் மீதுள்ள சமூகத்தின் அபிமானம் குறையவில்லை என்றே கூற வேண்டும்.இந்த அபிமானத்தையும் நம்பிக்கையையும் தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டுமென்றால் அது சமூகத்தின் உள நிலையை புரிந்து செயற்பட வேண்டும். இஸ்லாம் போதிக்கும் விழுமியங்கள், போராட்ட உணர்வு கலந்த, கொள்கை வாத அரசியல் செயற்பாடுகளை நோக்கி அது நகர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இந்த அடிபப்டை உள நிலையை புரிந்து கொள்ளாமல் இன்னும் ஏமாற்றலாம் என்று அது தப்புக்கணக்கு போடநினைக்கக் கூடாது.தவறினால் புதிய திசைபாதைகளை சமூகம் தேடி எடுக்கும்.
அபிவிருத்தியா? உரிமையா?
முஸ்லிம்களின் அரசியல் போராட்டம் அபிவிருத்தியை மட்டுமே மையப்படுத்தியதல்ல. அது உரிமைகளை வென்றெடுக்கவும் தக்கவைக்கவுமான போராட்டமாக இருக்கிறது. பெரும்பான்மை சிங்கள சமூகம் அபிவிருத்திக்கான ஆயுதமாக அரசியலை பயன்படுத்தலாம். ஆனால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் அதனை உரிமை போராட்டத்தின் ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டியுள்ளது.
இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நகர்வும் செயல்வாதமும் அபிவிருத்தியை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் உரிமைக் குரல் எழுப்புவதைவிட அபிவிருத்திக்காக பேசுவதே அதிகமாக உள்ளது. இருக்கும் உரிமைகளையும் தாரைவார்த்துவிட்டு அபிவிருத்திகளை அனுபவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?
நடப்பு நிலைமைகளை அவதானிக்கும் பொழுது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயல்வாதம் ஒற்றைத் தன்மைவாய்ந்ததாகவே காணப்படுகின்றது. தேர்தல் மேடைகளில் உரிமைக் குரல் எழுப்பும் அரசியல் நடிகர்கள் பேசவேண்டிய இடத்தில் ஊமையாகிப் போகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தளவில் இனிவரும் காலங்கள் சவால் மிக்கது. உரிமைப் போராட்டத்தை மையப்படுத்திய அரசியல் செயல்வாதத்திற்கு தேவை அதிகமாக உள்ளது.ஆகவே சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் தமது கொள்கைகளை புனரமைப்பு செய்ய வேண்டும். வருகின்ற மாகாண சபை தோதலில் முஸ்லிம் கட்சிகளுக்கு சமூகம் நல்லதொரு செய்தியை சொல்ல வேண்டும். முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களில் துணிகரமான உரிமைப் போராளிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். நமது ஊரான், சொந்தம் என்கின்ற அனுதாப உணர்வுகளிலிருந்து சமூகம் மீள வேண்டும். முஸ்லிம் கட்சி வேட்பாளர்களில் தகுதியானவர்கள் இல்லையென்றால் வேறு தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த பல மாதங்களில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பிரச்சினைகளை கையாளும் விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு மிகக் குறைவானதாகவே இருந்தது.இந்நிலையில் வடக்கில் ஆட்சியமைக்க இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எவ்வாறான உறவை முஸ்லிம் கட்சிகள் வைக்கப்போகின்றன என்பது முக்கியமான விடயமாகும். வடக்கு முஸ்லிம்களின் இருப்போடு தொடர்பான அரசியலை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான உடன்பாட்டு அரசியலால்தான் சாதிக்கலாம். அது விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் முஸ்லிம்கட்சிகள் கூட்டாக போட்டியிடுவது மிகுந்த பயனளிக்கும் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம்.
கட்சி பக்தியும் முஸ்லிம்களும்
எம்மை பொறுத்தவரை கட்சி அரசியல் என்பது உரிமை போராட்டத்தின் ஒரு ஆயுதம்.நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கு அதில் மிகுந்த தெளிவு அவசியம். பச்சைக்கட்சி, நீலக்கட்சி, சிவப்புக்கட்சி என்று உரிமை கோருவது அவரவரின் விருப்பங்களுக்கும் தெரிவுகளுக்கும் அமைவானது. ஆனால் அது கண்மூடித்தனமான பக்தியாகவோ மற்றயதை எப்போதும் நியாயமற்ற முறையில் பிழை காண்பதாகவோ அமையக் கூடாது.ஒரு முஸ்லிமை பொறுத்தவரை இஸ்லாம் என்ற கொள்கை மட்டுமே அவனால் விட்டுக்கொடுக்க முடியாதது. அதற்கு சமனாக அல்லது அதற்கு மேலாக ஒன்றை கருதுவது மிகப்பெரிய பிழையாகும்.
முஸ்லிம் சமூக அரசியலில் ஓர் மோசமான பதிவாக கட்சி பக்தி இருந்து வருகின்றது.பரம்பரையாக ஒரு கட்சிக்கே வாக்களிப்பதும் அதனை மட்டுமே சரி காண்பதும் சமூகத்தில் பரவலாக காணப்படும் விடயமாகும். இந்நிலை சமூகத்தின் சரியான தீர்மானமெடுக்கும் வலுவை குறைத்து விடுகின்றது.
இஸ்லாமிய பின்புலத்தில் ஒரு முஸ்லிம் அந்த சூழ்நிலைக்கேற்ப தீர்மானம் எடுக்க வேண்டும். அந்த பக்குவத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளையும் வேட்பாளர்களின் தகுதியை அவதானித்தும் சாத்தியப்பாடுகளை கவனத்திற்கொண்டும் செயற்பட வேண்டும். எப்போதும் அரசியலில் எதிர்நிலை மனப்போக்கு இருக்கக் கூடாது.சரியானது, நேர்மையானது, நன்மையானது எந்த திசையிலிருந்து வந்தாலும் அதனை அங்கீகரிக்கும் பக்குவம் நமக்கு வர வேண்டும்.
உண்மையில் சிலர் வாழையடி வாழையாக ஒரு கட்சியையே சார்ந்திருப்பதற்கு கட்சி அரசியலோடு தொடர்பான சில மோசமான வரலாற்று பதிவுகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதனை எப்போதும் நியாயப்படுத்தி நமது அரசியல் தீர்மானங்களை சரி காண முடியாது.
முஸ்லிம் அரசியல் புதிய திசை பாதைகளை நோக்கி நகர வேண்டியுள்ளது.கட்சி எல்லைகளையெல்லாம் கடந்து ஒரு நேர்மையான பார்வை நமக்கு வர வேண்டும். கட்சிக் கொள்கைளுக்குள் நாம் சுருங்கி விடக் கூடாது. எமது கொள்கை பின்புலத்தில் அரசியலை நாம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் புதிய முன்மாதிரிகளை நோக்கி எங்களால் செல்ல முடியும்.
வருகின்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் எதிரிடை கச்திகளுக்கு ஓர் 'கறுப்பு சமிக்ஞையை' காட்டிவிடாது புத்திசாலித்தனமாக நல்லதொரு சமிக்ஞையை காட்ட வேண்டும்.இப்போதுள்ள நிலையில் எதிர்ப்பு சமிக்ஞையிலிருந்து உடன்பாட்டு சமிக்ஞையை காட்டுவதே பொருத்தமானது.
இந்நிலைப்பாடு அவ்வந்த ஊர் சமூக அரசியல் சூழலுக்கு ஏற்ப வேறுபடும்.
எமது வாக்குகள் சிதறிவிடாமல் அர்த்தமுள்ள அழுத்தங்களை பிரயோகிக்கும் அல்லது ஆளுமையுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்வதாக இருக்க வேண்டும் என்பதையே நாம் இங்கே சொல்ல வருகிறோம். எப்போதும் நாம் தனிமனிதர்களை புகழ்பாடி சமூகத்தை விலைகொடுத்துவிடக் கூடாது. அரசியல்வாதிகள் சமூகத்தின் சேவகர்கள் என்ற படிநிலையிலிருந்தே நாம் பார்க்க வேண்டும். அவர்களை துதி பாடுவது பிழையான முடிவுகளுக்கே வழிவகுக்கும். நாம் சிறுபான்மையினர் என்ற வகையில் எம்மிலிருந்தே ஒரு பிரதிநிதியை நாம் தெரிவு செய்ய ஆர்வம் காட்டுவோம். இதில் பிழையில்லை. முஸ்லிம்களின் விவகாரத்தில் நபிகளாருக்கு உதவிய முஸ்லிம் அல்லாத அபூதாலிபை போல குரல்கொடுக்கும் அபூதாலிப்களை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படியான அபூதாலிப்களையும் இழந்து விடாமல் எமது வியூகங்களை அமைக்க வேண்டும்.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டதும் ஆங்காங்கே வேட்பாளர்கள் இதுவரையும் இல்லாத அக்கறையோடு சமூகத்தை அணுகுவதை காணலாம். உண்மையில் இதுதான் நமது அரசியலில் காணும் மிக மோசமான பக்கம். நமது கட்சிக்காரன் என்பதற்காக தகுதியற்ற ஒருவரின் வெற்றிக்கு உழைப்பதை தவிர்க்க வேண்டும். இப்படியான சந்தர்ப்பவாதிகள் குறித்து நமது சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெறும் மாயாஜால வார்த்தைகளால் உசுப்பேற்றும் அரசியல்வாதிகளால் பலதடவைகள் நாம் ஏமாந்து போயுள்ளோம். ஏமாற்றும் அரசியல் பேர்வழிகளை ஒதுக்கி நிதானமாக யோசித்து தகுதியானவர்களை இனங்கண்டு வாக்களிப்போம்.
எமது தெரிவு எதுவாக இருக்கவேண்டும் என்பதை பிரதேசங்கள் தோறும் ஒருங்கிணைந்து பேசி கலந்தாலோசித்து முடிவெடுப்பது இப்போதுள்ள நிலையில் பொருத்தமாக அமையும். அரசியலில் நமது முதிர்ச்சியை நோக்கிய முதல் படியாக அது இருக்கட்டும். அல்லாஹ் நம்மை அங்கீகரிக்கட்டும்.

0 comments:
Post a Comment