ஹஜ் கோட்டாவிற்குக் கோழிச் சண்டை பிடிப்பதும் பேரீச்சம் பழம் பகிர்வதும் தான் தமது கடமை என்று முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் நினைக்கின்றனர் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மடவளையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களது நலன் கருதி கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியையும் தாரை வார்த்த ஒரு கட்சியின் தலைவனாக நான் இருக்கின்றேன். முஸ்லிம் அமைச்சர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் ஹஜ் கோட்டாவிற்காக சண்டை பிடிப்பதும் ரமழான் மாதம் வந்தால் பேரீச்சம் பழங்களை பங்கீடு செய்து வைத்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் போது நாம் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளோம்.
நிபந்தனை அற்ற கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியை உதறித்தள்ளியவர்கள். ஏனென்றால் அதனை அன்று நாம் பொறுப்பேற்றிருந்தால் இந்நாட்டில் பயங்கர விபரீதங்கள் ஏற்பட்டிருக்கும். இன்று மாகாண சபையும் இருந்திருக்காது. எமது மறைந்த தலைவர் காட்டிச் சென்ற ஒரு வழிதான் பிழையான நேரத்தில் சரியான முடிவை எடுத்தாலும் அதுவும் பிழையாகி விடும் என்பது. எனவே நாம் சரியான நோக்கில் முடிவை எடுக்க வேண்டும். அன்று முதலமைச்சை எடுப்பது சரியானதாக இருந்தாலும் அது பிழையான நேரம். எனவே அதனை பொறுப்பேற்கவில்லை.
வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களது நன்மை கருதி அவ்வாறு அதனை தாரை வார்த்துள்ளோம். அதற்காக எம்மை விமர்சிப்பவர்கள் கூறுவது போல் தேர்தல் காலமான இப்போது அரசை விட்டு நாம் வெளியேறத் தேவையில்லை. தேவையானவர்கள் எம்மை வெளியேற்றுவார்கள். நாம் அவ்வாறு வெளியேறினால் அதுவும் ஒரு சர்வதேச சதியாக சித்தரிக்கப்படும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று எம்மை விமர்சிக்கின்றனர். வசை பாடுகின்றனர். விசித்திரமான அரசியலில் இவை அனைத்தும் சகஜம் தான் முகத்தோடு கோபித்துக் கொண்டு எமது மூக்கை அறுக்கும் அரசியல் செய்ய முடியாது. நாம் இன்று அரசிற்குள் இருந்து கொண்டு எமது உரிமைகளுக்காக பாடுபடுகிறோம். அரசிற்குள் ஒரு குட்டி எதிர்க்கட்சியாக தாம் துணிந்து செயல்படுகிறோம்.
0 comments:
Post a Comment