சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 16, 2013

திருகோணமலையில் விகாரை, படைமுகாம் அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிப்பு!

By on 12:01 AM

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சுவீகரித்து விகாரை அமைக்கவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் படை முகாம்களை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புல்மோட்டைப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.


புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 13 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அரிசிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய், வீதிப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை தொல் பொருள் ஆய்வு, விகாரை அமைத்தல், படைமுகாம் விஸ்தரித்தல், பூஜாபூமி வேலைத் திட்டம் ஆகியவற்றைக் காரணங்காட்டி சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யப்படுகின்றது.

 
புல்மூட்டை பிரதேச மக்கள் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,


மேற்படி திட்டங்களை காரணங்காட்டி மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள், தரிசு நிலங்கள் ஆகியவற்றை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றது. இதை தடுக்க முயற்சி செய்த எமது அரசியல் பிரதேச சபைத் தலைவர்கள் மதத் தலைவர்கள் ஆகியோரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


பாரம்பரியமாக விவசாயம் செய்த பெருந்தொகையான நிலங்கள் சுவீகரிக்கப்படவிருப்பதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது நிலத்தை இழக்கவுள்ளனர். அத்துடன் பத்திரமும் உறுதியுள்ளவர்களின் காணிகள் கூட பறிமுதல் செய்யப்படவுள்ளது. ஒரு சிலரிடம் பத்திரம் இல்லாதபோதும் அவர்கள் பலவருடங்களாக அக்காணிகளில் விவசாயம் செய்து வருவதுடன் குடியிருந்தும் கொண்டிருக்கிறார்கள்.


அரிசிமலை, விகாரை, நாகவிகாரை என்ற சிறிய சிறிய விகாரைகள் இருந்த இடங்களில் பெரும் விகாரைகளை அமைப்பதற்காகவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் பொன் மலைக்குடா என்ற இடத்திலும் இன்னோர் இடத்திலும் கடற்படை, இராணுவ முகாம் விஸ்தரிப்பு செய்ய நினைக்கின்றார்கள். ஏற்கனவே இவ்விடங்களில் முகாம்கள் இருந்ததில்லையெனவும் கவலை தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment