சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, September 3, 2013

மத்திய மாகாணத்தில் அபிவிருத்திகளை செய்யாத அரசாங்கம் வாக்குக் கேட்கிறது - கிரியெல்ல

By on 9:11 PM

மத்திய மாகாண சபையில் அரசாங்கம் எவ்வித அபிவிருத்திகளையும் செய்யாது வாக்குகளை மட்டும் பெற நினைக்கின்றது. இம்முறை மத்திய மாகாண சபை தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு நல்லதொரு பதிலடியை கொடுப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் விமான நிலையம் கட்டுவதனால் அப்பகுதி அபிவிருத்தியடைந்து விடாது. அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் நாட்டிற்காக பாடுபடுவோர். அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதைவிடுத்து பொய்களைக் கூறி மலையக மக்களை ஏமாற்றுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2005 இற்குப் பின்னர் மத்திய மாகாணத்தில் அபிவிருத்திகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள மக்கள் இன்றும் கூலி வேலைகளை செய்தே பிழைக்கின்றனர். மஹிந்த சிந்தனையின் கீழ் வலயத் திட்டங்கள் தொடர்பில் அறிக்கையிடுவதோடு அரசாங்கத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. அரசாங்கத்தின் சுயநலங்களுக்காக பொதுமக்களின் பணத்தை சூறையாடி சுகபோக வாழ்க்கையென அனுபவித்து வருகின்றனர்.

மத்திய மாகாணத்தில் விமான நிலையம் ஒன்றினை புனரமைக்கும் செயற்றிட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள மூவாயிரம் வீடுகள் உடைக்கப்படப் போவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். இவ்வாறு மக்களை அசெளகரியப்படுத்திப் பார்ப்பதில் அரசாங்கத்திற்கு ஆசையாக உள்ளதா?

மேலும் ஆசியாவில் பெரும்பாலான நாடுகளுக்கு ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை உள்ளது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டில் இச் சலுகை வழங்கப்படப் போகின்றது. ஆனால் இலங்கை இவர்களின் பட்டியலிலேயே இல்லை. இன்று அரசாங்கம் கடன்களை வாங்கியே அபிவிருத்தி செய்து வருகின்றது.
2004 இல் தனி நபருக்கான கடன் 20 ஆயிரம் ரூபாவாக இருந்தது. ஆனால் இன்று தனி நபர் செலுத்த வேண்டிய தொகை 3 இலட்சம் ரூபாவாக மாறி விட்டது. அரசாங்கம் உலக நாடுகளிடமிருந்து கடன்களை வாங்கி செலவிடுகிறது. ஆனால் அப்பாவி மக்களே அதற்கான பலனை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் மக்களிடம் இருந்து நல்லதொரு படிப்பினையினைக் கற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment