இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டும் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்மைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பந்தனை பாராட்டிக்கொண்டிருக்காது, உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் சிங்கள மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான நிலை உருவாகும்.
வடக்கு, கிழக்கு என்பது நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட தனி பிரதேசங்கள் அல்ல. அந்த பிரதேசங்கள் இலங்கை தன்னாதிக்கத்திற்கு உட்பட்டவை. எனவே சம்பந்தன் இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயரை போல் நாட்டை வடக்கு- கிழக்கு என தனிமைப்படுத்தி பேசுகிறார்.
அத்தோடு “தன்னாட்சி அதிகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச தயார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரிவினைவாதம் இருப்பது தெளிவாகியுள்ளது.
30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்டது. அரசியல்வாதிகள் எடுத்த பிழையான முடிவுகளால் பல அழிவுகளை சந்தித்தோம். பயங்கரவாதத்தை அழித்து, ஒழித்து கட்டி வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் யுத்தம் செய்யவில்லை. பிரிவினைவாத யுத்தத்தையே தோல்வி அடைய செய்தோம்.
இவ்வாறான ஒரு நிலையில் சம்பந்தன் தன்னாட்சி அதிகாரம் தமக்கு தேவை என கூறியுள்ளமை அரசியல் அமைப்பை மீறும் செயலாகும். எனவே அவருக்கு நாடாளுமன்றத்திற்கு வரும் அருகதை இல்லை. அவர் இலங்கையின் சட்டத்தை மீறியுள்ளார்.
எனவே சட்டத்தை மீறிய சம்பந்தனை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தியா, மொறக்கோ, ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்த முஸ்லிம்களும் உரிமைகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு தமிழ், முஸ்லிம்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமானால் சிங்களவர்கள் எங்கு போவார்கள். இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான ஒரு நிலைமை உருவாகும் என்றார்.
எனவே, அரசாங்கம் நாட்டையும், சிங்கள மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment