சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, September 18, 2013

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்துள்ளனர் - மஹ்மூத் மலிக்

By on 9:36 AM

கண்டி மாவட்டத்திலே மடவளை மலீக் என்றால் தெரியாத எவரும் இருக்க முடியாத அளவுக்கு இவர் பிரசித்தமானவர். அடிமட்ட அரசியல் நிறுவனமான பிரதேச சபையில் பிரதேச சபை ஆரம்ப காலம் முதல் உறுப்பினராக தொடர்ந்து இவர் இருந்து வருகிறார். அதுமட்டுமல்ல, பாத்ததும்பறை பிரதேச சபையின் உப தலைவராகவும் நீண்ட கால அனுபவமுடையவர். அது மட்டுமல்ல, இவர் தனது பணிகளை தனது பிரதேச சபைக்குள் மாத்திரம் முடக்கிக் கொள்ளவில்லை. முஸ்லிம்ளின் பொதுப் பிரச்சினைகளிலும் உரிமைப் பிரச்சினைகளிலும் எல்லை தாண்டி போகக்கூடியவர். முஸ்லிம் உரிமைக்காக நீதிமன்றம் சென்றுள்ள மூவ்வரில் இவரும் ஒவர். மூன்று மொழியிலும் புலமையுள்ள இவர் மற்றைய இனங்களுடன் நட்புறவை பேணி நற்பெயரைப் பெற்றவர் உயர் கல்வி பெற்ற இவர் முழு நேர அரசியல்வாதியாக செயற்பட்டு தன்னை சமூகத்திற்காக அர்ப்பணித்தவர்.
இவருடனான நேர்காணல்

உங்களைப் பற்றிய விபரங்களை கூறுவீர்களா?

நான் மடவளை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். மடவளை பிரபல உலமாவான மர்ஹும் மஹ்மூத் ஆலிம் எனது தகப்பனார். எனது முழுப் பெயர் மஹ்மூத் மலீக் ஆகும். அது மட்டுமல்ல, முருத்தலாவையைச் சேர்ந்த யாரும் அறிந்த மர்ஹும் பாரூக் உடையாரின் மருமகனுமாவேன். உயர்தரம் வரை கற்றுள்ள நான் மும்மொழிகளிலும் கடமையாற்றக் கூடியவன். அத்துடன் இந்த மொழி வளத்தினால் அனைவருடனும் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பை பெற முடிந்தது. அரசியல் டிப்ளோமா பாடநெறிகளையும் தொடர்ந்துள்ளேன்.

உங்கள் அரசியல் பிரவேசம் எப்படி அமைந்தது?

நான் எனது அரசியல் பயணத்தை 1989 இல் ஆரம்பித்தேன். அன்றிலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்ட நான் 1997ல் பாத்ததும்பறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டேன். முதல் தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, சிறிய விகிதத்தினராக முஸ்லிம்கள் வாழும் இப்பிரதேச சபையிலே போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்தேன். ஒரு சிறுபான்மையினரான நான் சிறிய தொகை முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் முதலாவது வருவதென்றால் அதற்குக் காரணம் எனக்கு இருந்த மக்கள் ஆதரவாகும். இந்த ஆதரவு தொடர்ந்தும் இருந்ததனால் நான் இப்பிரதேச சபையின் உபதலைவராகவும் நீண்ட காலம் பதவி வகித்துள்ளேன். அது மட்டுமல்ல, மற்றைய இன உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டேன். இதற்குக் காரணம் நான் பெற்ற பெரும்பான்மை வாக்குகளாகும். அந்த வாக்குகளுக்கு மக்கள் ஆதரவே காரணமாகும்.

2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மத்திய மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டேன். எனினும் 1200 வாக்குகள் குறைந்ததன் காரணமாக நான் தெரிவாகவில்லை. இந்த சிறிதளவு வாக்குகளே என்னை தோல்வியடையச் செய்தது.

முன்னரை விட அதிக வாக்குகளை பெறலாம் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, ஏனெனில் அக்காலத்தில் சூழ்நிலை வேறு தற்போது வேறு. பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் முஸ்லிம்கள் தங்களுக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேவை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்கள். மற்றைய இன பிரதிநிதிகள் மீதுள்ள நம்பிக்கையை இடித்து விட்டனர். தங்களுக்கான போராட தங்கள் இனத்தவரே தேவை என்பதை உணர்ந்து விட்டார்கள்.

நாட்டில் அண்மைக் காலங்களில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, எங்களுக்காக போகக் கூடிய பிரதிநிதித்துவம் தேவை என்பதை உணர்ந்து விட்டார்கள். முஸ்லிம் பிரதிநிதிகள் இடையிலும் எவர் எங்களுக்காக போராடுபவர் என்பதை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

சமூகத்திற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

எனது பிரதேச சபை மட்டத்தில் சமூகத்திற்கு ஏற்பட்ட ஏற்படவிருந்த பல பிரச்சினைகளில் நான் முன்னின்று தடுத்திருக்கின்றேன். போராடியிருக்கிறேன். பிரதேச சபையில் எமது சமூகத்திற்கு எதிரான எந்தச் செயலையும் செய்ய நான் இடமளிக்கவில்லை. இதற்கு நான் பிரசித்தத்தை பெற்றுக் கொள்ள முயலவில்லை. சமூகத்திற்கு எதிரான செயல்களைத் தடுத்திருக்கிறேன்.

நான் எனது பிரதேச சபையுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் மட்டுமல்ல, தேசிய மட்டத்திலும் எனது பங்களிப்பைச் செய்துள்ளேன்.

கடந்த காலங்களில் தோட்டப் பாடசாலை ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த சில தகைமைகள் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கத் தடையாய் இருந்தது. இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதால் ஒரு அமைப்பை உருவாக்கி நான் நீதிமன்றம் சென்றேன். நானே முதன் முதலாக வழக்குத் தாக்கல் செய்தேன். சட்டத்தரணி ஜிப்ரி போன்றவர்கள் இலவச சட்ட உதவிகளை செய்தார்கள். இதன் பின் இன்னும் சிலரும் நீதிமன்றம் சென்றாலும் நானே முதல் முதலில் துணிந்து இதைச் செய்தேன். அதல் எமது சமூகம் வென்றது. இதனால் பல நூறு பேர் ஆசிரியர் நியமனம் பெற்றனர்.

உள்ளூராட்சி வட்டார அமைப்புக்கான ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்கக் கூடிய ஆலோசனைகளை முன் வைத்ததோடு மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்கள் தோறும் சென்று இதற்கான கூட்டங்களை நடத்தி அவர்களை ஊக்குவித்தோம்.

கிராம சேவை பிரிவுகள் உருவாக்குதல் பிரதேச சபை எல்லைகளை மறுசீரமைத்தல் ஆணைக்குழுக்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்க முடிந்தது.
எனக்குள்ள மொழித் திறனால் எமது சமூகம் மீதான தப்பபிப்பிராயங்களை முளையிலே கிள்ளி எறிய முடிந்தது. பல இனத்தவரும் ஒற்றுமையாக வாழும் நிலையை உருவாக்க முடிந்தது. இதனால் நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் மாற்று இனத்தவர் எமது தீவிர ஆதரவாளராக களமிறங்கி செயற்பட்டனர்.

ஏன் ஐக்கிய தேசியக் கட்சியை தெரிவு செய்தீர்கள்?

எமது அரசியல் வரலாற்றை நோக்கினால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தான் முஸ்லிம்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழ்ந்துள்ளனர். தமது தொழில்களை செய்து கொண்டு முன்னேறியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குறைவேயில்லை. இனக்கலவரங்கள் மோதல்கள், எதிர்ப் பிரசாரங்களுக்கு முடிவே இல்லை. எவ்வளவு இருந்தாலும் அரசு தடுக்க நடவடிக்கை எடுக்காது இது எமது அனுபவமாகும்.

அண்மைக் காலங்களில் எத்தனையோ பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. சில இனவாத இயக்கங்கள் பொதுக்கூட்டங்களை கூட்டி முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றனர். ஊர்வலமாக சென்று தாக்குகின்றனர். முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு தடை விதிக்க முயல்கின்றனர். முஸ்லிம்களை நாட்டின் எதிரிகளாகவும் போதைப் பொருள் விநியோகஸ்தர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்டுகிறார்கள். அரசாங்கம் இதை தடுப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. இதன் மூலம் மறைமுகமாக ஆதரவினை வழங்குகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் இவ்வாறு இல்லை. எனவே முஸ்லிம்களுக்கு நிம்மதியாகவும் அச்சமின்றியும் வாழ ஐக்கிய தேசியக்கட்சியே சிறந்தது. எனவே இவ்வாறான சமூக நன்மை கருதியே நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயல்படுகின்றேன் போட்டியிடுகிறேன். நான் ஆரம்பம் முதல் இதே கட்சியில் இருக்கிறேன். சொந்த நன்மைக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி மாறவுமில்லை. மக்களை ஏமாற்றவும் இல்லை. எனக்கு சமூகத்தின் நன்மையே முக்கியம்.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

முதலாவது பிரச்சினை முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் நிலை வேண்டும். தமது மதக் கடமைகளை எதுவித தடைகளும் இன்றி பயமுறுத்தல்களும் இன்றி நிறைவேற்றும் நிலை வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் தடுக்கப்பட வேண்டும். உரிமையும் தலை நிமிர்ந்து வாழும் நிலை வேண்டும்.

மற்ற முக்கிய பிரச்சினை கல்விப் பிரச்சினையாகும். கல்வி வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. பெருந்தொகை முஸ்லிம்கள் வாழும் கண்டி நகரத்திலே முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி பயில தரமான வசதிகள்கொண்ட பாடசாலை இல்லை. உள்ள பாடசாலைகளில் வசதிகள் இல்லை. மாற்றினால் பாடசாலைகளில் முஸ்லிம்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. எனவே அலைந்து திரியும் நிலை இறுதியில் சர்வதேச பாடசாலைகளுக்கு சேர்க்கிறார்கள். பிற்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏழைகள் இதனால் பெரிதும்பாதிக்கப்படுகின்றனர். வசதி குறைந்த குடும்பங்களில் திறமையான மாணவர்களின வாழ்க்கை வீணாகிறது.

மாவட்டத்திலே தமிழர்களும் முஸ்லிம்களும் 20% பேர் வாழ்கிறார்கள். எனினும் தொழில் நுட்பக்கல்லூரி போன்ற உயர் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி மூல பாடநெறிகள் இல்லை. இதனால் பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வி பெற முடியாது போகிறது.

அது மட்டுமல்ல, மாகாண சபையின் கீழுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மற்றைய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாகாண சபை முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றிலாவது சகல வசதிகளுடனான விஞ்ஞான கூடம் இல்லை. விஞ்ஞானத் துறை உயர்தரமும் இல்லை. இதுவே கண்டி மாவட்டத்தின் நிலை பெயரளவில் முஸ்லிம் கல்விப் பிரிவு அமைக்கப்பட்ட போதும் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. வசதிகளும் இல்லை.

ஏனைய இனப்பாடசாலைகளில் உள்ள வளங்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

நீங்கள் வெற்றியடைந்தால் இதற்கு என்ன செய்வீர்கள்?

ஒரு முஸ்லிம் என்ற வகையில் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. அதற்காக நான் போராட பின் நிற்கமாட்டேன். அங்கு எனது பதவியை காத்துக் கொண்டால் போதும் என்று இருக்கமாட்டேன். எனக்கு சமூகமே முக்கியம்.
பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை பேசித்தீர்ப்பேன். முடியா விட்டால் போராட்டம் தான். இதில் மாற்றமில்லை.

கல்வித்துறையைப் பொறுத்த வரை புலமைப்பரிசில் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை உயர் மட்டத்திற்கு கொண்டு வர திட்டம் வகுத்து செயற்படுவேன். இவர்களை ஊக்குவிப்பது மட்டுமன்றி சகல வழிகளிலும் வழிகாட்டி கல்வித் தரத்தை உயர்த்த பாடுபடுவேன். அவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பிரதேச மட்டத்தில் சில பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றை வளமிக்க பாடசாலைகளாக மாற்ற மாகாண சபை மூலம் நடவடிக்கை எடுப்பேன். அதேபோன்று வளம் குறைந்த பாடசாலைகள் விடயத்தில் கூடிய கவனம் எடுப்பேன்.

எனது எல்லா நடவடிக்கைகளிலும் புத்தி ஜீவிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வேன்.

தொழில் வாய்ப்பு விடயங்களில் எமது பங்கைப் பெற போராடுவேன். அரசியல்வாதிகளுடன் இணைந்து இதற்கு ஆவன செய்வேன்.
எமது மாணவர்கள் மும்மொழியிலும் திறமை பெற வேண்டும். இதுவே எனது நோக்கமாகும். இதற்கு ஒரு வழியை காணுவேன்.

கல்விக் கருத்தரங்குகள் பரீட்சை கருத்தரங்குகள் வழிகாட்டி கருத்தரங்குகள் தொழில் வாய்ப்பு ஆலோசனை போன்ற விடயங்கள் தொடர்பாக புத்திஜீவிகளின உதவியுடன் திட்டம் வகுப்பேன்.

முஸ்லிம்களின் வாக்கு ஐ.தே. கட்சிக்கு கிடைக்கும். இதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் அநியாயங்களை மக்கள் அறிந்துள்ளனர்.

0 comments:

Post a Comment