திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பகுதியில் காணிகளை கையகப்படுத்துவது
தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்ளூர் நீதிமன்றம் அழைப்பாணை
அனுப்பியுள்ளது.
அந்தப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஏக்கர்கள் அளவுக்கு தமிழ்
மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள், புனித பூமி என்று கூறப்பட்டு
தொல்பொருள்துறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் மாகாண சபை
உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில்
ஈடுபட்டதால் பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது புனித பூமி, தொல்பொருள் என்கிற
போர்வையில், காணிகளை அளவிடுவதற்கான கட்டளையை காவல்துறையினர் நீதிமன்றத்திடம்
கோரியபோது அது மறுக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள்
சமர்பிக்கப்படாததால், அது குறித்து விளக்கமளிக்க மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
குச்சவெளி பிரதேச செயலர் ஆகியோர் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில், பொதுமக்களின்
காணிகளை கையகப்படுத்தும் நோக்கில், எந்தவிதமான
அளவிடல் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என்றும்
நீதிமன்றம் கூறிவிட்டது.
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அரசு, ஒரு பொம்மை அரசு போலச்
செயல்படுகிறது என்றும், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை
அதிகாரங்கள் இல்லாததே இப்படியான செயற்பாட்டுக்கு காரணம் என்றும் மாகாண சபை
உறுப்பினர் முகமது ரமலான் அன்வர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
புல்மோட்டை பகுதியில் புனித பூமி என்கிற போர்வையில்
காணிகள் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையை தடுக்க பலமுறை குரல்
கொடுக்கப்பட்டும், மாகாண அமைச்சரவையால் அதை நிறுத்த முடியவில்லை எனவும் அன்வர்
குற்றஞ்சாட்டுகிறார்.

0 comments:
Post a Comment