சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, October 10, 2013

முன்னாள் கலஹா தமிழ் ம.வி அதிபர் தை. தனராஜ் பேராசிரியரானார்

By on 4:13 AM





இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட சிரேஸ்ட்ட விரிவுரையாளர் திரு. தை. தனராஜ் அப்பல்கலைக்கழக பேரவையினால் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவி உயர்வு கடந்த பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டுள்ளது.


மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தனராஜ், மிடில்ட்ரன் தோட்டப் பாடசாலை, தலவாக்கலை சம்பத்திரிசியார் கல்லூரி, அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.


ஒரு மாணவ ஆசிரியராகத் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரத்தைக் கொண்டிருப்பதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக தனது இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.


அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது முதுமாணி பட்டங்களையும் புதுடில்லி கல்வித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டுள்ளார். 


கோல்புறூக் தமிழ் வித்தியாலயம், அட்டன் புனித யோன் பொஸ்கோ கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், கலஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.


தவிர பேராசிரியர் மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதுடன் கல்வி அமைச்சிலும் பின்னர் தேசிய கல்வி நிறுவகத்திலும் பல்வேறு பதவி நிலைகளில் பணியாற்றியுள்ளார்.


தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையின் பணிப்பாளராக கடமையாற்றிய பேராசிரியர் திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பதவியேற்கும் முன்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டம் செய்த தொலைக்கல்வி நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தில் நிபுணத்துவ ஆலோசகராகவும் பணிபுரிந்தார். 


பல கல்விசார் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் பல உள்நாட்டு, வெளிநாட்டு சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிவருகின்றார்.  


இந்தியா, அவுஸ்திரேலியா, மலேஷpயா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, நேபாளம், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளில் நடைபெற்ற கல்விசார் கருத்தரங்குகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ள பேராசிரியர் தனராஜ் தற்போது பல கல்வி நிறுவனங்களில் வளவாளராகவும் ஆலோசகராகவும் பயிற்றுனராகவும் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் அவர்களின் கல்விப் பணி தொடர அவரது மாணவர்களும் கல்விச் சமூகத்தினரும்  வாழ்த்துகின்றனர்.

0 comments:

Post a Comment