இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் 2ஆவதும், இறுதியுமான போட்டியை இலங்கை வெற்றிகொண்டுள்ளது. இதன்படி இத்தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளதோடு, உலக டுவென்டி டுவென்டி தரப்படுத்தலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
முதலாவது விக்கெட்டை 3 ஓட்டங்களுக்கு இழந்த அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்து, 14.4 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் லூக் றொங்கி, நேதன் மக்கலம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக லூக் றொங்கி 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும், அன்ரன் டேவ்சிச் 23 பந்துகளில் 30 ஓட்டங்களையும், நேதன் மக்கலம் 16 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க, நுவான் குலசேகர, அஞ்சலோ மத்தியூஸ், றமித் றம்புக்வெல்ல, அஜந்த மென்டிஸ், திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
143 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டாக மஹேல ஜெயவர்தனவை அணி 8 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இழந்த இலங்கை, இரண்டாவது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், குசால் பெரேரா 37 பந்துகளில் 57 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக றொப் நிக்கல், மிற்சல் மக்லநகன் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக குசால் பெரேரா தெரிவானார்.

0 comments:
Post a Comment