தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தான் மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே. கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டது. எதிர் வரும் செப்டெம்பர் மாதம் இச்சபைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையிலேயே மத்திய மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் ஐ.தே.காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, வடமாகாணத்தில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
அஸாத் சாலி நீண்டகாலமாக ஐ.தே.க வின் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் இருந்துள்ளார். அத்தோடு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஐ.தேகாவுடன் முரண்பட்டு ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தார். மட்டுன்றி 2011 இல் இடம்பெற்ற கொழும்பு மாநகர சபைத் தேர்தலின்போது அரசாங்கம் சார்பில் போட்டியிட்டார். பின்னர் அரசாங்கத்துடன் முரண்பட்டு மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைதேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 7000 வரையிலான வாக்குகளை பெற்ற போதிலும் மாகாண சபைக்கு தெரிவாகவில்லை. பின்னர் மு.கா அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியமைத்ததையடுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறி தேசிய ஐக்கிய முன்னணியை மீளமைத்தார்.
இந்நிலையிலேயே கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் தேல்தலில் போட்டியிடுவாது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment