சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 23, 2013

என்னை தீவிரவாதியாக சித்திரித்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள் - அஸாத் சாலி

By on 5:53 AM


என்னையும் விக்னேஸ்வரனையும் தீவிரவாதிகள் என தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்த அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி விட்டார்கள். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்றாகும். உண்மையிலே எனக்கு கிடைத்துள்ள பெரு வெற்றியாகும். தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் எனக்கு ஒன்றிணைந்து வாக்களித்து அரசாங்கத்துக்கு இன ஒற்றுமைக்கான அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஸாத் சாலி 55385 விருப்பு வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அஸாத் சாலி தனது வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொது பல சேனா, ராவணா, ராவய என்ற தீவிரவாத பெரும்பான்மை இனக்குழுக்கள் இனரீதியான கலவரங்களை ஆரம்பிக்க முயற்சிக்கின்ற நிலையில் தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டியது அவசியமாகும். கண்டி, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பெளத்த பீட தேரர்கள் இன ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார்கள். மூன்று இன சமய தலைவர்களுடனும் இதற்கென பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கண்டி மாவட்டத்தில் முன்பு போட்டியிட்ட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் அப்துல் காதர் மற்றும் ஹலீம் என்போர் பெற்ற விருப்பு வாக்குகளை விட நான் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்க மாட்டேன். அத்தோடு கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல அனைத்து முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி முஸ்லிம்களுக்கு எதிரான சவால்களுக்கு அவர்கள் மூலமாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

0 comments:

Post a Comment